செவ்வாய், 29 ஜனவரி, 2019

தகவல் பெறும் (அறியும்) உரிமைச் சட்டம்


தகவல் பெறும் (அறியும்)  உரிமைச் சட்டம்

தகவல் பெறும் (அறியும்)  உரிமைச் சட்டம், 2005 ஆனது இந்திய அரசிடம் அல்லது அரசு உதவிபெறும் நிறுவனங்களிடமிருந்து குடிமக்கள் அவர்களுக்கு வேண்டிய விவரங்களை உரிமையுடன் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக்க உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும்.

இச்சட்டம் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவின் பிறப் பகுதிகள் அனைத்திற்கும் பொருந்தும். இதன்படி ஒவ்வொரு இந்தியக் குடிமகனும்/மகளும் தகவல் பெறும் உரிமை பெற்றவர்கள்.

இச்சட்டத்தின் நோக்கம்:
அரசு அதிகாரிகள் தங்களது செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டிருப்பதும், ஊழலைக் கட்டுப்படுத்தி தவிர்ப்பதும், அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் துறைகள், மக்களுக்குத் தேவையானத் தகவல்களைத் தரக் கடமைப்பட்டுள்ளதை உறுதிசெய்வதும் தகவல் பெறும் சட்டத்தின் நோக்கங்களாகும்.

அலுவலருக்கான தகவல் கொடுக்கும் கடமை:
அரசாங்கம் சார்ந்த அல்லது அரசு உதவிப் பெறும் நிறுவனங்கள், துறைகள், அலுவலகங்கள் அனைத்தும் தங்களைப் பற்றிய தகவல்களைத் தாமாகவே முன்வந்து மக்களுக்கு கொடுக்க வேண்டும். குறிப்பாக தகவல்களை பெறும் நோக்கோடு மக்கள் தங்களிடம் கேட்கும்பொழுது தகவல்களை அளிக்கவேண்டியது அரசு, நிறுவன அலுவலர்களின் கடமை என இச்சட்டம் கூறுகின்றது.

காலக்கெடு:
விண்ணப்பம் கிடைத்த 30 நாட்களுக்குள் தகவல் அலுவலர் பதில் அளிக்கவேண்டும். ஆனால் கேட்கப்பட்ட தகவல் அவசரத் தகவல்கள் என்றால் 48 மணி நேரத்துக்குள் சம்பந்தப்பட்டவர் பதிலளிக்கவேண்டும். விண்ணப்பத்தில் அவசர தகவல் வேண்டும் என்று குறிப்பிட்டு, அவசரத்திற்கான காரணத்தையும் விண்ணப்பத்தில் விளக்கமாக குறிப்பிட வேண்டும்.

குடிமக்கள் தகவல்களை பெறும் முறை:
தகவல் பெற விரும்பும் நபர் ஆங்கிலம் அல்லது விண்ணப்பம் பெறும் அரசின் அலுவல் மொழியில் எழுத்து வடிவில் நமக்கு வேண்டிய விவரங்களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

தகவலை கேள்விகளாக கேட்க கூடாது! அவ்வாறு கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் கொடுக்க வேண்டிய அவசியம் விண்ணப்பம் பெறும் அலுவலருக்கு இல்லை!

விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு பொது தகவல் அலுவலர் என்று முகவரியிட்டு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.

தகவல் கோரும் விண்ணப்பத்தாரர், அத்தகவல் பற்றிய விபரங்களையும் அவரைத் தொடர்புக் கொள்வதற்கான முகவரியையும் கட்டாயம் விண்ணப்பத்தில் தெளிவாக குறிப்பிட வேண்டும்.

ஆனால் அத்தகவலை உரிய அதிகாரியிடம் இருந்து பெற விண்ணப்பதாரர் நீதிமன்ற கட்டண வில்லையாகவோ, வரைவோலையாகவோ குறைந்த பட்சமாக ரூ.10/- விண்ணப்பத்துடன் செலுத்த வேண்டும். மேலும் விண்ணப்பிக்கப்பட்ட தகவல்களை பெற கூடுதல் கட்டணத்தை பொது தகவல் அலுவலர் எழுத்து வடிவில் கோரினால், சம்பந்தப்பட்ட துறையின் பெயரில் வரைவோலை எடுத்து கொடுக்க வேண்டும்.

விதிவிலக்கு  பெற்றுள்ள தகவல்கள்:
விண்ணப்பம் செய்யும் எவருக்கும் தகவல் அறியும் உரிமை சட்டம்-2005, பிரிவு 8 (1) இன் கீழ் பின்வரும் தகவல்களைக் கொடுக்கவேண்டிய அவசியமில்லை.

           () இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு நாட்டின் பாதுகாப்பு போர் யுக்திகள், நாட்டின் அறிவியல் மற்றும் பொருளாதார நலன், வெளி நாடுகளின் உறவு இவற்றைப் பாதிக்கும் குற்றம் புரியத் தூண்டுதலாக அமையும் தகவல்கள்,

           () நீதிமன்றம், தீர்ப்பாயம் இவை வெளிப்படையாகத் தடை செய்துள்ளத் தகவல்கள் அல்லது நீதிமன்ற அவமதிப்பை உண்டாக்கும் தகவல்கள்.

            () நாடாளுமன்றம் மற்றும் மாநில சிறப்புரிமைகளை மீறுமை செய்யும் தகவல்கள்.

      () வாணிக நம்பகத் தன்மை, வியாபார இரகசியங்கள், அறிவு சார் சொத்துடைமை இவை வெளிப்படுத்தப்பட்டால் அது மூன்றாம் தரப்பினரின் சந்தைப் போட்டிக்குக் குந்தகம் விளைவிக்கும் தகவல்கள். (இத்தகவல்கள் பெரும்பான்மை மக்களுக்கு இன்றியமையாதது என்று தகுதிவாய்ந்த அதிகார அமைப்பு மனநிறைவு அடைந்தாலன்றி அத்தகவல்களை வெளியிடக் கூடாது).

     () ஒருவருடைய பொறுப்புரிமை தொடர்பு உறவால் கிடைத்த தகவலை, பெரும்பான்மை மக்களின் நலனுக்கு இன்றியமையாதது என, தகுதிவாய்ந்த அதிகார அமைப்பு மனநிறைவு அடைந்தாலன்றி அத்தகவலை வெளியிடக்கூடாது.

          () வெளிநாட்டு அரசுகளிடமிருந்து இரகசியமாகப் பெற்றத் தகவல்கள்.

     () ஒரு நபரின் வாழ்வு அல்லது உடல் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுத்துவதை, தகவலின் மூலத்தை அடையாளப்படுத்துவதை அல்லது சட்டம் நடைமுறைப்படுத்துவதை அல்லது பாதுகாப்பு நோக்கங்களுக்காக இரகசியமாக கொடுக்கப்பட்ட உதவிக்கு ஆபத்து விளைவிப்பதை ஏற்படுத்தும் தகவல்கள்.

            () புலனாய்வை அல்லது குற்றவாளிகளைக் கைது செய்வதை அல்லது அவர்கள் மீது குற்ற வழக்குத் தொடர்வதைத் தடை செய்யும் தகவல்கள்.

       () அமைச்சரவை செயலர்கள் மற்றும் பிற அலுவலர்கள் கலந்தாய்வுகளின் பதிவேடுகள் உள்ளிட்ட அமைச்சரவை ஏடுகள் வெளிப்படுத்தப்படுவதிலிருந்து விலக்குப் பெறுகின்றன.

             ஆனால் அமைச்சரவை முடிவுகள் எடுத்த பின்னர், அம்முடிவுகள் அவற்றிற்கான காரணங்கள், பின்புலங்கள் இவைகள் தடை செய்யப்பட்ட தகவல்களாக இல்லாதிருந்தால் பொது மக்களுக்குத் தெரிவிக்கலாம்.

            () பொது செயல்பாட்டிற்கு, பொது நலனிற்கு தொடர்பில்லாத தனி நபரின் அந்தரங்கத்தில், நியாமற்ற முறையில் தலையீடு செய்யும் தனிநபரோடுத் தொடர்புடையத் தகவலைத் தெரிவித்தல் கூடாது. நாடாளுமன்றத்திற்கோ, மாநில சட்டப் பேரவைக்கோ மறுக்கப்படாத ஒரு தகவல் தனிநபருக்கும் மறுக்கப்படக் கூடாது.

இழப்பீடு:
இச்சட்டத்தின்படி தவறு செய்யும் தகவல் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் வழங்கும் அதிகாரம் என்பது மத்தியத் தகவல் ஆணையம் அல்லது மாநிலத் தகவல் ஆணையத்திடம் உள்ளது. குறித்த நேரத்தில் தகவல் அளிக்காமை, தவறான தகவல்கள் தருதல் அல்லது வேண்டுமென்றே திருத்தப்பட்ட தகவல்களை தருதல் ஆகியவற்றிற்காக துறை சார்ந்த நடவடிக்கைகள் எடுக்க நடவடிக்கை எடுக்கலாம். மேலும் தலா ரூ.250 ரூபாய் வீதம் ரூ.25000/- -க்கு மிகாமல் பாதிக்கப் பட்டவருக்கு தகவல் ஆலுவலரிடமிருந்து இழப்பீடு வசூலிக்கவும் இச்சட்டம் வழிவகை செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மாவட்ட அலுவலக நடைமுறை நூல் (VOL.2)