ஞாயிறு, 27 ஜனவரி, 2019

பொது அதிகாரப் பத்திரம்


அதிகாரப் பத்திரம்!

ஒரே நேரத்தில் பல இடங்களில் காட்சி அளிப்பதும் செயலாற்றுவதும் கடவுளுக்கு வேண்டுமானால் சாத்தியமானதாக நாம் அறிந்திருக்கலாம். ஒவ்வொரு  மனிதனும் தன் பணியை தானே செய்தாக வேண்டும் என்ற நிலையில், இருவேறு இடங்களில் அவனின் தேவை இருப்பின் என்ன செய்வது? சட்டத்தின் கீழ்  அந்த நிலைக்கு ஒரு வழிவகை செய்யப் பட்டுள்ளது.  

பொதுவாக ஒரு நபரின் சொந்தச் செயலுக்காகவோ, தொழில் ரீதியாகவோ, அவரின் தேவை இருப்பின், அந்தச் செயலை ஏதோ ஒரு காரணத்தால் நேரடியாக
  நிறைவேற்ற முடியாத நிலையில், தனக்காக ஒருவரை நியமித்து, அந்தப் பணியினை நிறைவு செய்ய, சட்டப்படி அதிகாரப் பத்திரம் மூலம் ஒருவரை நியமித்து  அந்தப் பணியினை நிறைவேற்றிக் கொள்ளலாம்.    

இதையே பொதுவாக பலரும் ‘பவர்’ என்று கூறுவார்கள். இந்த வார்த்தையை பலர் தங்களுடைய அன்றாட வாழ்வில் உபயோகிப்பதை கேட்கக்கூடிய வாய்ப்புகள்
  அதிகம். பெரும்பாலான நேரங்களில் சட்டத்தின் முன் அதற்கான விளக்கம், செயல்பாடு என்ன என்று முழுமையாக அறியாமல் செயலாற்றி பல சட்டச்  சிக்கல்களில் மாட்டிக்கொள்வதைப் பார்த்திருக்கிறோம்.  

ஒருவர் தன்னுடைய பணியை, தன்னுடைய நிலையில் வேறொருவர் இருந்து அந்தப் பணியினை செய்து கொடுக்கத் தயாரிக்கப்படும் அதிகாரப் பத்திரமே ‘பவர் ஆப் அட்டர்னி’ என்று கூறப்படுகிறது. இந்த அதிகாரப் பத்திரம் பொது அதிகாரப் பத்திரம்
(General Power of Attorney), சிறப்பு அதிகாரப் பத்திரம்  (Special Power of Attorney) என இருவகைப்படும். 

பொது அதிகாரப் பத்திரம் என்பது அதிகாரம் கொடுத்தவரின் அனைத்துச் செயல்களையும் அதிகாரம் பெறுபவர் செயலாற்றும் வகையில் இருப்பது. உதாரணமாக...
  வயோதிகம் காரணமாக தன்னுடைய செயலை ஆற்ற இயலாமல் இருப்பவர்களால் இயற்றப்படும் அதிகாரப் பத்திரம். அதுபோல, நிறுவனங்களில் தொழில்  ரீதியாக   Sleeping Partner   என்று சொல்லக்கூடிய செயல்படா பங்கு தாரர் கொடுக்கக்கூடிய அதிகாரப் பத்திரத்தையும் குறிப்பிடலாம். 

சிறப்பு அதிகாரப் பத்திரம் என்பது அந்தப்பத்திரத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும் செயல்களை மட்டுமே செயலாற்றக்கூடிய அதிகாரம்.  உதாரணமாக... தன் சார்பாக  நீதிமன்றத்தில் ஆஜராக இன்னொருவரை நியமிப்பது.  

பொதுவாக ஒரு தனிநபரோ, நிறுவனமோ அவர்களின் நிலையில் இருந்து செயலாற்ற இன்னொரு வருக்கு அளிக்கும் அதிகாரம் என்பதுதான் இந்த பவர் ஆப்
  அட்டர்னி. அன்றாட நடைமுறையில் சொத்து வாங்குவது, விற்பது போன்ற பரிவர்த்தனைகளில் இந்த அதிகாரப் பத்திரத்தின் செயல்பாட்டை நாம் அதிக அளவில்  காணும் வாய்ப்பிருக்கிறது. அதிலும் ழிஸிமி என்று சொல்லக்கூடிய வெளி நாட்டு வாழ் இந்தியர்கள், மூத்த குடிமக்கள், பெண்கள் ஆகியோரே தங்களின் பணியை  செய்ய வேறொருவரை நியமிப்பதை அதிகமாகக் காண முடிகிறது.  

‘நம்பினார் கெடுவதில்லை’ என்பது நான்மறை தீர்ப்பு. இந்த உலகம் இயங்குவதே நம்பிக்கையின் அடிப்படையில்தான். தன் மீது வைக்கும் நம்பிக்கையை விடவும்,  மற்றவர் மீது வைக்கும் நம்பிக்கை போற்றுதலுக் குரிய ஒரு செயல். ஒருவேளை நம்பிக்கைக்கு உரியவர் அந்த நம்பிக்கையை தகர்க்கும்போது ஏற்படும் ஏமாற்றம்,  இழப்பு சில நேரங்களில் ஈடு செய்ய முடியாததாக இருக்கும். அது ஏற்படுத்தும் பாதிப்பும் அதிகம். 

இந்த அதிகாரப் பத்திரமே ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்படும் ஒன்றுதான். இது இருமுனை கூர் கத்தி போன்றது. அதிகாரப் பத்திரம், கொடுப்பவருக்கும்  பெறுபவருக்கும் இடையே உருவாகும் நல்ல இணக்கத்தால் ஏற்படும் ஒரு செயல். சில நேரங்களில் கொடுக்கப்பட்ட அதிகாரத்தை தவறான எண்ணத்துடன்  பயன்படுத்த எண்ணினால், அந்த அதிகாரத்தை கொடுத்தவருக்கு ஏற்படும் பாதிப்பு பெரும் அளவில் இருக்கும். ஒருவருக்கு அதிகாரப் பத்திரத்தின் மூலம்  கொடுக் கப்பட்ட அதிகாரம் அந்தப் பத்திரம் அமலில் உள்ள வரை மட்டுமே செல்லும்.  ஒருவேளை அந்தப் பத்திரத்தை அவர் அறியாமல், கொடுத்தவர் ரத்து  செய்யும் பட்சத்தில், அதிகாரம் பெற்றவருக்கும் சட்டச் சிக்கல்களும் பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பொதுவாக எழுத்து மூலமாக கொடுக்கப்பட்ட  அதிகாரப் பத்திரத்தை வாய்மொழியாக ரத்து செய்வது சட்டத்தின் முன் ஏற்புடையதல்ல. அதோடு, அதிகாரம் கொடுத்தவர் அந்த அதிகாரப் பத்திரத்தை ரத்து  செய்வதை அதிகாரம் பெற்றவர் தடுக்க இயலாது.  

ஓர் அதிகாரப் பத்திரத்தின் மூலம் அதிகாரம் பெறுபவர் செய்யும் அனைத்துச் செயல்களுக்கும் அதிகாரம் கொடுத்தவரே பொறுப்பேற்க வேண்டும். கொடுக்கப் பட்ட
  அதிகாரப் பத்திரம் நிலுவையில் உள்ள வரை அவரின் செயல்பாடுகள் சட்டத்துக்குட்பட்ட செயல்களாகவே நோக்கப்படும். ஒருவேளை அதிகாரம் பெறுபவர் அந்தப்  பத்திரத்தில் கொடுக்கப்பட்ட அதிகார வரம்பை மீறும் போது, தான் கொடுத்த அதிகாரத்தை தவிர, மற்ற செயல்களுக்கு அதிகாரம் கொடுத்தவர் பொறுப்பாளராக  மாட்டார். அதிகாரம் பெறுபவர் செய்யும் தவறுகளுக்கு சட்டப்படி பாதிக்கப்பட்ட யாரேனும் நடவடிக்கை எடுக்க இயலும்.  

இந்த அதிகாரப் பத்திரம் Power of Attorney Act  1882 ன் கீழ் செயல்படுகிறது. இப்போது எந்தவகை அதிகாரப் பத்திரமாக இருப்பினும் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அப்பத்திரத்தில் அதிகாரம் கொடுப்பவ ரும் அதிகாரம் பெறுபவரும் கையொப்பமிட வேண்டும். இரண்டு சாட்சிகளின் முன்னிலையில்  இந்தப் பத்திரம் இயற்றப்படும். இந்த நால்வரின் தங்கும் முகவரிக்கான சான்று சமர்ப்பிக்க வேண்டியதும் அவசியம். இவர்களின் புகைப் படமும் அந்தப் பத்திரத்தில்  இடம் பெற வேண்டும். அதிகாரப் பத்திரத்தை சொத்து பரிவர்த்தனைகளில் பயன் படுத்தும்போது   Life Certificate   என்று கூறப் படுகிற வாழ்நாள் சான்றிதழை  பத்திரப் பதிவாளர் முன் சமர்ப்பிக்க வேண்டியது சட்டப்படி அவசியம். இந்தப் பத்திரம் பற்றிய தகவல்கள் வில்லங்க சான்றிதழ் களிலும் இடம் பெறுதல் வேண்டும். அதிகாரப் பத்திரத்தின் மூலம் அதிகாரப் பெறுபவருக்கும் கொடுப்பவருக்கும் இடையே எந்தவித பண பறிமாற்றமும் இருக்கக் கூடாது.  

பொதுவாக அதிகாரப் பத்திரம் கொடுப்பவருக்கு மரணம் சம்பவிக்கும் போது அல்லது அதனைப் பெற்றவருக்கு மரணம் சம்பவிக்கும் போது, அது தானே அதன்  செயல்பாட்டினை சட்டப்படி இழக்கிறது. அதே போல ஒன்றுக்கும் மேற்பட்ட வர்கள் கூட்டாக அதிகாரம் கொடுக்கும் போதோ,  ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கூட்டாக அதிகாரம் பெறும்போதோ, அதில் யாரேனும் ஒருவருக்கு மரணம் ஏற்படு மென்றாலும் அந்தப் பத்திரம் அதன்  செயல்பாட்டினை சட்டப்படி இழக்கிறது.  இவ்வளவு சட்டப் பாதுகாப்பு இருந்தும், பல வேளைகளில் அதிகாரப் பத்திரத்தின் மூலம் ஏற்படக்கூடிய சட்ட சிக்கல்கள்  நீதிமன்றக் கதவுகளை தட்டக்கூடிய நிலை இருப்பதை மறுப்பதற்கில்லை.  

நம் நாட்டில் நிலவும் ஆணாதிக்கச் சிந்தனையினாலும், பெண்கள் சிலர் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின்மையினாலும் அவர்களுக்கான செயல்களை  ஆற்ற இன்னொருவருக்கு அதிகாரம் கொடுக்கும் நிலை பல இடங்களில் இன்றும் நடை முறையில் உள்ளது. நம்மால் முடியும் என்ற எண்ணம் அனைவரிடமும் இருப்பது அவசியம். பெண்கள் அவசிய மில்லாமல் மற்றவருக்கு அதிகாரம் கொடுக்கும் செயல்களைத் தவிர்ப்பது பெண்ணினத்துக்கே நலம் பயக்கும்.  

பொதுவாக சட்டத்தின் முன், தேவையிருக்கும் பட்சத்தில் மட்டும் இந்த அதிகாரப் பத்திரத்தை இயற்றுவது சிறப்பு. எவ்வாறு இருந்தாலும் ஒரு நபர் விழிப்புடன் இருப்பது மிகவும் அவசியம். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்தானே?  விழித்திருப்போர் வீழ்த்தப் படுவதில்லை!

ஓர் அதிகாரப் பத்திரத்தின் மூலம் அதிகாரம் பெறுபவர் செய்யும் அனைத்துச் செயல்களுக்கும் அதிகாரம் கொடுத்தவரே பொறுப்பேற்க வேண்டும்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மாவட்ட அலுவலக நடைமுறை நூல் (VOL.2)